டிக்கெட் காசு
அலமு பாட்டி.. சுருங்கிய தோல், குழிந்த கன்னங்கள், மங்கிய பார்வை, நடுங்கிய கைகள், தள்ளாடிய நடை, முதிர்ந்த பேச்சு, குழந்தை மனது, எழுபது வயது.. மதுரையில் வசிக்கும் அப்பாட்டிக்கு இரு மகன்கள். பாட்டிக்கு தன் மகன்கள் மீது கொள்ளை பிரியம்..
அலமு பாட்டி அடிப்படையில் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள். பதினாறு வயதில் திருமணமானது, சின்னப்பன் என்ற தேங்காய் மண்டி முதலாளியுடன். ஆனால் அலமு பாட்டியின் திருமண வாழ்க்கை சில நாட்க்களில் கசந்துவிட்டது. காரணம், சின்னப்பன் மிகப்பெரிய குடிகாரன். தினமும் குடித்துவிட்டு மனைவிக்கு அடி உதை தான். இந்நிலையில் தன் மூத்த மகனை பெற்றெடுத்தாள். சுந்தர் என பெயரும் சூட்டினாள். காலப்போக்கில் கணவனின் தொல்லைகள் அதிகரித்தது. குடிப்பழக்கத்தால் தேங்காய் மண்டி துவம்சமானது. பாட்டியின் தாய்வீட்டு சீதனம் காணாமல் போனது. வறுமையால் பீடிக்கபட்டாள் அலமு. உதவ யாரும் இல்லை. வீடு வீடக சென்று பத்துப்பாத்திரம் தேய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.
ஒருநாள் சின்னப்பனும் கிடப்பிலானான். மருத்துவ செலவுக்கும் பணம் இல்லை. சில நாட்க்களில் அவன் உயிரும் பிரிந்தது. அப்போது அலமு பாட்டி நிறைமாத கர்ப்பிணி. நினைத்துபாருங்கள், அலமு பாட்டி எவ்வளவு பாடுபட்டிருப்பாள் என்று..
இளைய மகனும் பிறந்தான். சங்கர் என பெயர் சூட்டினாள். பணக்கார கோலத்தில் திருமணமானவள், நான்கே ஆண்டுகளில் பிச்சைக்கார கோலத்திற்க்கு உருகுலைந்திருந்தாள். அடித்து பிடித்து தன் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்தாள். பிள்ளைகளும் வாஞ்சையுடன் படித்து பள்ளிப்படிப்பை முடித்தனர். அதற்க்குமேல் பிள்ளைகளை படிக்கவைக்க அலமு பாட்டியால் முடியவில்லை. மூத்தவன் பொறுப்பானவன். முயற்ச்சி எடுத்து தேர்வுகள் எழுதி நல்ல வங்கி பணியும் கிடைக்கப்பெற்றான்.
இளையவன் அறிவாளி தான் என்றாலும் சோம்பேறி. செல்லம் அதிகம். நாளடைவில் அலமு பாட்டியின் வார்த்தைகளையும் பொருட்படுத்த தவறினான். என்றாலும் அவனை அப்படியே விட்டுவிடமுடியாதல்லவா?!
அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என பணத்தை புரட்டி ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொடுத்தாள் இளையவனுக்கு. வியாபாரம் சுமாராக போனது. இருவருகும் திருமணம் செய்து வைத்துவிட்டால் தன் வாழ்வின் மிகப்பெரிய கடமை முடிந்துவிடும் என்று நினைத்த அலமு பாட்டி திருமண ஏற்ப்படுகளை செய்து ஒரே மேடையில் இருவரின் திருமணத்தையும் எளிய முறையில் நடத்தி முடித்தாள். தனக்கு பெண் குழந்தைகள் ஏதும் இல்லாத வருத்தம் ஆரம்பத்தில் இருந்தது என்றாலும், பிள்ளைகள் திருமண வயதை எட்டியபோது, “நமக்கு பொண் கொழந்த பெறக்காததும் நல்லது தான்.. இல்லைனா இன்னேரம் நெருப்புல நிக்கிறமாதிரி இருந்துருக்கும்” என தனக்கு தானே கூறி ஆறுதல் படுத்திக்கொண்டாள்.
இளையவன் இப்போது சொத்து பிரச்சனையை கிளப்பினான். பாட்டிக்கு சொத்து என்று இருந்தது தாங்கள் ஆனையூரில் வசித்திருக்கும் அந்த ஒரு ஓட்டுவீடு மட்டுமே. அதை எப்படி பிரிப்பது என்று அலமு பாட்டி சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில், எனக்கு வீடு வேண்டாம் என மூத்தவன் இளையவனுக்கு விட்டுக்கொடுத்தான் ஒரு நிபந்தனையுடன். பாட்டியின் காலத்திற்க்கு பிறகே வீடு இளையவனுக்கு சொந்தம் என்பது தான் அது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். சுந்தரும் தன் மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டான் கோரிப்பளையத்திற்க்கு.
இந்த பிரச்சனை சுமூகமாக தீர்ந்தால் மீனாட்சி அம்மன் உண்டியலில் நூறு ரூபாய் போடுவதாக நேர்ந்திருந்த பாட்டி, கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடனை தீர்த்து வந்தாள். ஆனையூரில் இருந்து பெரியார் நிலையம் வரை பேருந்தில் சென்ற அலமு பாட்டிக்கு அதுவே கடைசி பேருந்து பயணமாக இருந்தது. அதன் பிறகு அவளுக்கு பேருந்தில் செல்லவேண்டிய அவசியம் ஏற்ப்படவில்லை. அப்போது பேருந்து கட்டணம் ஐம்பது காசுகளாக இருந்தது.
ஆண்டுகள் உருண்டோடின...
அலமு பாட்டி பேரப்பிள்ளைகளும் பெற்றாள். மூத்தவனுக்கு ஒரு மகள், இளையவனுக்கு ஒரு மகன். இருவரும் திருமண வயதில். அலமு பாட்டி வயதாகி விட்ட நிலையில் வேலைக்கு செல்ல வழி இல்லாமல் தன் இளைய மகனை நாடி இருந்து வந்தாள். இத்தனை ஆண்டுகளில் அலமு பாட்டி மிகவும் மகிழ்ச்சியாக தன் சொந்த வீட்டில் இளைய மகனின் அரவணைப்பில் காலத்தை ஓட்டியிருப்பாள் என்று நீங்கள் எண்ணியிருந்தால் அது தவறு.
ஆரம்பத்தில் ஒழுக்கமாக இருந்த சங்கரின் போக்கு காலப்போக்கில் தன் தந்தையைப்போன்றே மாறியது. மகன் மீது அக்கறை காட்ட மறந்தான். மனைவியை மகிழ்ச்சிப்படுத்த மறந்தான். தந்தையைபோன்றே குடிப்பழக்கத்திற்க்கு அடிமையானான். என்றும் குடித்துவிட்டு மனைவிக்கு அடி உதை. அவ்வப்போது அலமு பாட்டிக்கும் கிடைத்தது.
சங்கரின் மனைவி என்ன வசியம் போட்டாள் என தெரியவில்லை. காலப்போக்கில் சங்கர் அவள் வசம். இருவரும் கூட்டணி போட்டு பாட்டியை அடிக்கவும் உதைக்கவும் செய்தனர். ஊரில் ரவுடியாக உருவாகிக்கொண்டிருந்த அவர்களது மகனுக்கு அடித்து பழக பாட்டி உறுதுணையாக இருந்தாள். பார்த்தீர்களா கொடுமையை.. இன்று வரை சங்கருக்கு ஒரே பெட்டிக்கடை தான்.
சுந்தர் பக்கம் பார்த்தால், உழைப்பால் உயர்ந்து நின்றான. தான் வேலை செய்த வங்கியில் மதுரை வட்ட மேலாளராக அதிகாரம் பெற்றிருந்தான். நல்ல சம்பளம். தன் மகளையும் மருத்துவர் ஆக்கியிருந்தான். நல்ல சொத்து செல்வாக்கு இன்னும் தாயின் மேல் சற்றும் குன்றாத பாசம். மாதம் தவறாமல் பாட்டியை வந்து பார்ப்பதால் பாட்டிக்கு அவர்கள் வீட்டிற்க்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்ப்படவில்லை.
சுந்தரின் இந்த வளர்ச்சியைகண்டு கருகிக்கொண்டிருந்தனர் சங்கர் குடும்பத்தார். வீடு பாட்டியின் பெயரில் இருப்பது சங்கரின் மனைவியின் கண்ணை உறுத்தியது. ஒரெ மூச்சாக தீர்த்துகட்டிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றாலும் ஊருக்கு தெரிந்துவிடுமோ என்ற பயம். இதனால் தான் இந்த அடி உதை. அணு அணுவாய் கொல்லும் திட்டம். என்ன கொடுமை பார்த்தீர்களா.. இந்த அடி உதை விஷயம் சற்றும் வெளியே கசிந்துவிடாமல் பூசி மொழுகி வைத்திருந்தனர் சங்கரின் குடும்பத்தார். பாட்டியை வெளியே விடுவதில்லை. அப்படி பாட்டி வெளியே வந்தாலும் இந்த அடி உதை விஷயத்தை யாருடனும் பகிர்ந்துகொள்வதில்லை. தன் மகன் செய்யும் தவறுகளை வெளியுலகத்திற்க்கு காட்ட அவளுக்கு மனம் வரவில்லை. இதுவல்லவோ தாய் உள்ளம்...
இப்படியே காலம் கடந்தது. ஒரு நாள் காலை, அடி உதை பொறுக்க முடியாமல் தன் மூத்த மகன் வீட்டிற்க்கு சென்று விடலாம் என முடிவு செய்தாள். பெரியார் நிலையம் அருகே சொந்தமாக வீடு கட்டியிருந்தான் சுந்தர். எப்போதோ ஒரு முறை அவன் வந்தபோது எழுதித்தந்த முகவரி அவள் கையில் இருந்தது. அதை கையில் எடுத்துக்கொண்டாள். பேருந்தில் சீட்டு வாங்க காசு வேண்டுமே.. தன் டிரங்குப்பெட்டியை ஆராய்ந்தாள். இரண்டு ஐம்பது காசு நாணயங்கள் கிடைத்தது.
அதை எடுத்துக்கோண்டு யாருக்கும் தெரியாமல் கிளம்பினாள். பேருந்தும் ஏறியாயிற்று. காலை நேரம் என்பதால் கூட்டம் இல்லை. ஜன்னல் சீட்டாய் பார்த்து அமர்ந்தாள். “டிக்கட்.. டிக்கட்..” என்றவாறு நட்த்துனர் அருகே வந்தார்.
பாட்டி ஐம்பது காசை எடுத்து நீட்டியவாறே.. “பெரியார் ஒண்ணு” என்றாள். காசை கையில் வாங்கி பார்த்த நட்த்துனர் கடுப்பானார்.. அவருக்கு வீட்டில் என்ன பிரச்சனையோ.. “இந்தா கிழவி.. எந்த காலத்துல இருக்க நீ?? இப்ப மினிமம் டிக்கட்டே அஞ்சு ருவா..” என்றவாறு சில்லறையை முகத்தில் வீசினார். மேலும் “வண்டிய நிப்பாட்டுய்யா. காலங்காத்தாலயே வந்துட்டாளுக சாவுகிராக்கிக..” என்றார்.. பாட்டி, கீழே விழுந்த சில்லறையை பொறுக்க, வண்டியும் சரட்டென்று நின்றது.. கீழே தள்ளாத குறையாக இறகிவிட்டார்.
பாட்டிக்கு பெரியார் வரை நடக்க தெம்பு இல்லை.. வேறு வழி இல்லாமல் திரும்பவும் வீட்டை நோக்கி நடந்தாள் அடி உதை வாங்க.. காத்திருப்பாள் இந்த பாட்டி.. தன் மூத்த மகனின் அடுத்த மாத வருகைக்கு.. உயிருடன் இருந்தால்..
:-சாரதி